சிட்னி: ஆஸ்திரேலியா ரஷ்ய அதிபர் புட்டின்மீது நேரடிப் பொருளியல் தடைகளை விதிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது.
அத்துடன் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 339 பேர் மீதும் ரஷ்ய பெரும் செல்வந்தர்கள் எட்டுப் பேர் மீதும் பொருளியல் தடைகள் விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிஸ் பெய்ன் நேற்று தெரிவித்தார்.
எப்போதும் நடுநிலை வகிக்கும் நாடான சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தால் பொருளியல் தடைக்கு உள்ளான ரஷ்ய தனி நபர்களும் அமைப்புகளும் சுவிஸ் வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு களைத் தொடங்க முடியாது என்று கூறியுள்ளது.
அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி தங்கள் பணத்தைப் பதுக்கவதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும். ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட 363 பேர், 4 நிறுவனங்கள் கொண்ட பெயர் பட்டியல் சுவிஸ் வங்கிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, தைவான் உள்ளிட்டவை ஏற்கெனவே ரஷ்யாவுக்கு எதிராக பொருளியல் தடைகளை அளித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்ய உக்ரேனிய சண்டையில் அமைதியான, இணக்கமான தீர்வைக் கண்டறியும் எல்லா முயற்சிகளும் முடு்க்கிவிடப்பட வேண்டும் என்று மலேசியா கூறியுள்ளது. உயிருடற் சேதத்தைத் தடுக்க அனைத்து தரப்புகளும் பின்வாங்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் ஈஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நேற்று விடுத்த அறிக்கையில் கூறினார்.
இவ்வேளையில் ரஷ்ய ஊடகங்கள் தனது தளங்களில் விளம்பரம் செய்யவும் பணம் ஈட்டவும் ஃபேஸ்புக் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே, ரஷ்ய அரசாங்கம் தனது ஃபேஸ்புக் சேவைகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக மெட்டா நிறுவனம் கூறியிருந்தது.
தனது சமூக ஊடகத் தளங்களில் தகவல்களை சரிபார்க்கவும் உள்ளடக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கவும் வேண்டாம் என்று ரஷ்ய அரசாங்கம் விடுத்த உத்தரவைச் செயல்படுத்த மறுத்ததற்காக தன் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப் பட்டதாக மெட்டா கூறியது.

