சுமத்ராவில் இரண்டு நாள்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போன ஆறு பேரை இந்தோனீசிய மீட்புப் பணியாளர்கள் நேற்று தேடி வந்தனர்.
வெள்ளிக்கிழமை காலை உண்டான அந்த நிலநடுக்கத்தில் குறைந்தது எட்டுப் பேர் மாண்டனர்.
முதலில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உண்டானதாகவும் அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு கூறியது.
நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள், பள்ளிவாசல்கள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.
காணமால் போன ஆறு பேரும் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என்று இந்தோனீசிய தேசிய பேரிடர் மீட்புப் பணி அமைப்பின் பேச்சாளர் நேற்று கூறினார்.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 86 பேர் காயமுற்றனர். அவர்களில் 10 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக அமைப்பு கூறியது.
சுமத்ராவின் பசாமான், மேற்கு பசாமான் நகரங்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்தனர். கனரக இயந்திரங்களைக் கொண்டு உயிர்பிழைத்திருக்கக் கூடியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

