அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முதல் கறுப்பினப் பெண் பதவி ஏற்கக்கூடும்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கறுப்பினப் பெண்ணான நீதிபதி கேட்டன்ஜி பிரௌன் ஜாக்சனின் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு முன்மொழிந்துள்ளார். அமெரிக்க செனட் சபை அவரது பணிநியமனத்தை உறுதி செய்தால், உச்சநீதிமன்றத்தின் 233 ஆண்டுகால வரலாற்றில் அவரே முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக இருப்பார்.
திருவாட்டி ஜாக்சனை, அமெரிக்காவின் சிறந்த சட்ட நிபுணர்களில் ஒருவர் என்று திரு பைடன் வருணித்தார்.
அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு நீதிபதியாக திருவாட்டி ஜாக்சன் பணியாற்றுகிறார்.
திருவாட்டி ஜாக்சன் ஜூன் மாதத்தில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இதற்கு முன்னர் கறுப்பினத்தைச் சேர்ந்த இரு ஆண்கள் நீதிபதிகளாக இருந்துள்ளனர்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் முகக்கவசம் கட்டாயமில்லை
அபுதாபி: ஐக்கிய அரபு சிற்றரசுகள், அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. திறந்த வெளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அது அறிவித்துள்ளது. இருப்பினும் கட்டடங்களுக்குள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அந்நாடு கூறியுள்ளது.
புதிய விதிமுறைகள் நேற்று நடப்புக்கு வந்தன.
அதன் பகுதியாக பொருளியல், சுற்றுலாத் துறை இடங்களில் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளையும் அது அகற்றியுள்ளது.

