மாஸ்கோ: உக்ரேனின் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியிருந்தாலும், அதன் தலைநகர் கியவ்வைக் கைப்பற்ற திணறுகிறது.
ரஷ்யா எதிர்பார்த்ததைவிட, உக்ரேன் வீரர்கள் கடுமையாக போரிடுவதே அதற்கு காரணம்.
கியவ் நகரத்தில் ரஷ்ய ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது என்றாலும் திட்டமிட்டபடி கியவ்வை எளிதில் கைப்பற்றமுடியவில்லை.
ரஷ்ய திட்டமிடல் குறித்து நன்கு அறிந்த அதிகாரி ஒருவர், தனது ராணுவம் வேகமாக முன்னேறும் என ரஷ்யா நம்பியிருந்ததாகச் சொன்னார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட கிரெம்ளின் ரஷ்யாவின் முன்னேற்றம் வெற்றிகரமாக இருப்பதாக சொன்னது.
எதிர்பாராத அளவுக்கு உக்ரேன் தெரிவிக்கும் எதிர்ப்பு காரணமாக, தனது முன்னேற்றம் மெதுவாக உள்ளது குறித்தும் வான் எல்லையை முற்றிலும் கைப்பற்ற முடியாதது குறித்தும் ரஷ்யா எரிச்சல் அடைந்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
ரஷ்ய வீரர்கள், மூத்த அதிகாரிகள் சிலரையும் உக்ரேனிய படைகள் சிறைப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், தெருச் சண்டைகளுக்கு மத்தியில், ரஷ்யப் படைகள் தலைநகர் கியவ்வை நெருங்கி வருகின்றன.
ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் உக்ரேனைக் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும் அந்த அதிகாரி சொன்னார்.
அதன் பிறகு, உக்ரேனின் ராணுவம் அழிக்கப்பட்டு, அதன் அரசாங்கத்தில் ரஷ்ய ஆதரவு தலைவர் ஒருவரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி சொன்னார். பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவது ரஷ்யாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில் உக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா, "உக்ரேனைப் பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டவர், உலக அமைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இவை உக்ரேன் பாதுகாப்புக்கான அனைத்துலகப் படை என அறியப்படும்.
"நாம் இணைந்தே ஹிட்லரை வீழ்த்தினோம். இணைந்தே புட்டினையும் வீழ்த்துவோம்," என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறைகூவல் விடுத்துள்ளார்.
உக்ரேனில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவருக்குமே ராணுவம் ஆயுதங்களை வழங்கியுள்ளது.
இதற்கிடையே, உக்ரேனிய சாலை, கட்டட பராமரிப்பு நிறுவனம் ஒன்று, ரஷ்யப் படைகளைக் குழப்பும் விதமாக சாலை வழிகாட்டி குறியீடுகளை அழித்து வருவதாக சொன்னது.

