மெக்சிகோ பொதுவிருதை வென்ற ஆக இளம், மூத்த வீரரானார் நடால்
அகாபல்கோ: மெக்சிகோவின் அகாபல்கோ நகரில் நடைபெற்ற டென்னிஸ் பொதுவிருதுக்கான ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், 35 வயது நடாலும் பிரிட்டனைச் சேர்ந்த கேமரூன் நோரியும் மோதினர். இந்த போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரூனை வீழ்த்தி நடால் 4வது முறையாக இப்பட்டத்தை வென்றார்.
2005, 2013, 2020 ஆகிய ஆண்டுகளில் இப்பட்டத்தை நடால் வென்றுள்ளார். இப்பட்டத்தை வென்ற ஆக இளம் வீரர், மூத்த வீரர் என்ற இரு பெருமையும் இப்போது இவருக்கே சொந்தம்.
சென்ற ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக தான் விளையாட்டில் இருந்து விலகவேண்டியிருக்குமோ என்ற எண்ணிய நடால், இவ்வாண்டு கலந்துகொண்ட
3 பொதுவிருதுப் போட்டிகளையும் வென்றுள்ளார்.
ஆரத்தழுவிய சிட்டி, எவர்ட்டன் குழுக்களின் உக்ரேனிய வீரர்கள்
லண்டன்: ஐரோப்பா முழுவதும் காற்பந்தாட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குழுக்கள், வீரர்கள், ரசிகர்களிடமிருந்து உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத் தொடரில் எதிரெதிர் குழுவிற்காக விளையாடும் இரு உக்ரேனிய வீரர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலை வெளிப்படுத்தினர்.
சிட்டியின் தற்காப்பு வீரர் ஒலெக்சாண்டர் ஜின்சென்கோவும் எவர்ட்டன் குழுவின் விட்டலி மைகோலென்கோவும் ஆட்டம் தொடங்குவதற்கு முன், சற்று நேரம் பேசி, ஆரத்தழுவிக் கொண்டனர்.
அக்குழுக்களின் மற்ற வீரர்களும் உக்ரேன் கொடியை அணிந்து வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த ஆட்டத்தை 0-1 என்ற கோல்கணக்கில் எவர்ட்டனை வென்றது சிட்டி. ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது, ஃபில் போடென் போட்ட கோல்தான், சிட்டிக்கு வெற்றியைத் தந்தது. வாட்ஃபர்ட், மேன்யூ குழுக்கள் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் சமநிலை கண்டது.
இபிஎல் காற்பந்தாட்ட போட்டியில்
மீண்டும் கிறிஸ்டியன் எரிக்சன்
லண்டன்: இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, மீண்டும் காற்பந்தாட்ட அரங்கில் களமிறங்கிய கிறிஸ்டியன் எரிக்சனுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர்.
நியூகாசலுக்கு எதிராக 52வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கினார் பிரென்ட்ஃபர்ட் குழுவின் கிறிஸ்டியன் எரிக்சன்.
2020ல் ஜூன் மாதம் நடைபெற்ற யூரோ தொடரில் ஃபின்லாந்திற்கு எதிரான ஆட்டத்தின்போது கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்தார். அதன்பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இதயத்தில் தகடு ஒன்று பொருத்தப்பட்டது. எனவே இன்டர் மிலான் குழுவில் இருந்து நீக்கப்பட்ட அவர், இலவச ஒப்பந்தத்தில் பிரென்ட்ஃபர்ட் குழுவில் இணைந்தார்.
நேற்றைய ஆட்டத்திற்குப் பிறகு பேசிய எரிக்சன், "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரென்ட்ஃப்ர்ட் குழு தொடர்ந்து இபிஎல் தொடரில் நீடிப்பதற்கு உதவுவேன்," என்றார். இந்த ஆட்டத்தை 2-0 என்ற கோல்கணக்கில் நியூகாசல் வென்றது.

