ஒமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று சிங்கப்பூரில் முதன்முதலாக கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டதிலிருந்து, ஐந்து முதல் 11 வயது வரையுள்ள ஏறக்குறைய 27,000 சிறார் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் மூன்று நாள்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுகின்றனர்.
கொவிட்-19 பாதிப்புகளில் பெரும்பாலானவை தற்போது அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் ஒமிக்ரான் வகை கிருமித்தொற்று எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் தெரிவித்துள்ளன.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களாக இருப்பதாகவும் இவ்விரு மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயதை அவர்கள் எட்டாததே அதற்குக் காரணம்.
தற்போது, 12 வயதிற்குக்கீழ் உள்ள 57 சிறுவர்கள் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. மேலும், ஒருவருக்கு உயிர்வாயு தேவைப்பட்டதாகவும் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அது கூறியது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உள்ளூரில் 14,064 பேருக்குத் தொற்று உறுதியானது. கொவிட்-19க்காக மருத்துவமனைகளில் 1,553 பேர் சிகிச்சை பெற்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கை 46ஆகவும் உயிர்வாயு தேவைப்படுவோரின் எண்ணிக்கை 214ஆகவும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து முதல் 11 வயது வரையுள்ள கிட்டத்தட்ட 222,000 சிறுவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டிருப்பதாகவும் மேலும் 14,000 சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவுசெய்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. இந்த வயதுப் பிரிவில் 300,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர்.
இந்த வயதுப் பிரிவினரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 238,253 சிறுவர்களில் 10 பேருக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் சென்ற வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

