மாஸ்கோ: உக்ரேனுக்கு எதிராக மிகப்பெரும் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவை கடும் பொருளதார, அரசியல் தடைகள் மூலம் உலக நாடுகள் தனிமைப்படுத்தி வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா, ரஷ்ய விமானங்கள் ஐரோப்பிய ஆகாயவெளியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.
ரஷ்யர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களுக்கும் இத்தடை பொருந்தும். தனியார் விமானங்களும் ஐரோப்பிய வான்எல்லையைப் பயன்படுத்த முடியாது.
இது, அமெரிக்காவும் ரஷ்ய விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
'வோட்கா'விற்குத் தடை
அமெரிக்காவின் பல மாநிலங்களில் ரஷ்யாவின் வோட்கா மதுபானம் உள்ளிட்ட ரஷ்ய மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ரஷ்ய தயாரிப்பு மதுபானங்கள் கடைகளில் இருந்து அகற்றப்பட்டன.
நேற்று முன்தினம், ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கான நிதி ஆதரவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், ரஷ்யாவின் மத்திய வங்கி மீது கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கூறின.
'ஸ்விஃப்ட்' பணப் பரிவர்த்தனையில் இருந்து ரஷ்ய வங்கிகளை ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகியவை நீக்கின.
ஏற்றுமதி கட்டுப்பாடு
ஆசிய நாடுகளில் ஜப்பானும் தென்கொரியாவும் ரஷ்யாவுக்கு எதிராக இதே நடவடிக்கையை எடுத்துள்ளன.
கணினிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், உணர்கருவிகள், லேசர்கள், கடல், விண்வெளி உபகரணங்கள் ஆகியவற்றை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தென்கொரியா கூறியுள்ளது.
பெலாரஸ் அதிபருக்கு எதிராக ஜப்பான் தடை
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக தடை விதிப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நேற்று சொன்னார்.
ரஷ்ய மத்திய வங்கி மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொன்ன அவர், ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றார்.
அதேசமயம் உக்ரேனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலரைக் கடனாகவும் மனிதாபிமான உதவியாக மற்றொரு 100 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.
ஜப்பானில் உள்ள உக்ரேனியர்களுக்கான விசா காலத்தை நீட்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
தங்கள் நாட்டில் உள்ள உக்ரேனியர்களின் விசா காலத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிப்பதாக இலங்கையும் கூறியுள்ளது.
அணுவாயுத தாக்குதல்: ரஷ்யா எச்சரிக்கை
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன. அமெரிக்காவும் உக்ரேனுக்கு ஆயுத உதவி, நிதி உதவி அளிப்பதாகக் கூறியுள்ளது.
உக்ரேன் மீதான தனது போருக்கு மேற்கத்திய தலைமையிலான பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், தமது ராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு நாடும் இடையூறு செய்தால் அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரேன் மக்கள் கையில் ஆயுதங்களுடன் தெருவில் இறங்கி ரஷ்ய வீரர்களை எதிர்த்து வருகின்றனர். இதனால், உக்ரேன் தலைநகர் கியவ்வைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றன ரஷ்யப் படைகள்.
ரஷ்யா எதிர்பார்த்ததைவிட உக்ரேன் படைகள் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது.

