ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான உக்ரேனியத் தூதர் செர்ஜி கிலிட்சியா, திங்கட்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அங்கிருந்த உறுப்பினர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் உரை நிகழ்த்தினார்.
"உக்ரேன் தாக்குப்பிடிக்கவில்லை என்றால், ஐக்கிய நாட்டு நிறுவனம் தாக்குப்பிடிக்காது. இதில் போலி நம்பிக்கைக்கு இடமில்லை," என்று அவர் கூறினார்.
உக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்படுவதற்கு முன் தம்முடைய தாயாருக்கு அவர் அனுப்பிய கடைசி குறுஞ்செய்திகளை திரு கிலிட்சியா வாசித்தார்.
தாயார்: அல்யோஷா, நீ எப்படி இருக்கிறாய்? உன்னிடம் இருந்து ஏன் இத்தனை நாள்களாக பதிலே வரவில்லை? நீ உண்மையிலேயே பயிற்சியில் இருக்கிறாயா?
ராணுவ வீரர்: அம்மா, நான் கிரிமியாவில் இல்லை, பயிற்சி நடவடிக்கையிலும் இல்லை.
தாயார்: இப்போது நீ எங்கு இருக்கிறாய்? உனக்கு பார்சல் ஒன்றை நான் அனுப்பிவைக்க முடியுமா என்ற அப்பா கேட்கிறார்.
ராணுவ வீரர்: எந்த மாதிரியான பார்சல் அம்மா, எனக்கு அனுப்பிவைக்க முடியுமா?
தாயார்: நீ என்ன பேசுகிறாய், என்ன நடந்தது?
தொடர்புடைய செய்திகள்
ராணுவ வீரர்: அம்மா, நான் உக்ரேனில் இருக்கிறேன். இங்கு கடுமையான போர் நடக்கிறது. எனக்கு அச்சமாக உள்ளது. நாங்கள் குண்டு வீசி நகர்களை தாக்குகிறோம். பொதுமக்கள் குறிவைக்கப்படுகின்றனர். எங்களது கவச வாகனங்களை அவர்கள் வழிமறிக்கின்றனர். எங்களை சர்வாதிகாரி என அழைக்கின்றனர். அம்மா, இது மிகவும் சிரமமாக உள்ளது.
அந்த ராணுவ வீரர் பின்னர் உயிரிழந்ததாக திரு கிலிட்சியா பொதுக் கூட்டத்திடம் கூறினார்.
"இந்த அசம்பாவிதத்தின் அளவை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்றால், இந்தப் பொதுக் கூட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு நாட்டின் பெயர்ப் பலகைக்குப் பக்கத்தில் 30க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள், நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள், பிள்ளைகளின் ஆன்மாக்கள் உள்ளன," என்று திரு கிலிட்சியா கூறியதாக ஸ்கை நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டது.