கியவ்: ரஷ்யாவின் படையெடுப்பைச் சமாளிக்கும் வகையில், உலக நாடுகள் உக்ரேனுக்கு நிதி உதவி அளிப்பது மட்டுமல்லாமல், ஆயுதங்களையும் அனுப்பி உதவி வருகின்றன.
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியவுடனயே ஜெர்மனியும் அமெரிக்காவும் உக்ரேனுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதாக அறிவித்துவிட்டன.
அந்தப் பட்டியலில் அண்மையில் ஆஸ்திரேலியாவும் இத்தாலியும் இணைந்துள்ளன.
ஏவுகணைகள், வெடிமருந்துகள் உட்பட ஆபத்தான தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதியளித்துள்ளார்.
இதற்காக 70 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (50 மில்லியன் வெள்ளி) ஒதுக்கியுள்ளது ஆஸ்திரேலியா.
ராணுவ தொழில்நுட்ப உதவிக்கு மட்டுமே நிதி அளிக்கப்படும் என்று சென்ற வாரம் கூறிய ஆஸ்திரேலியா, நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
அதே சமயம், ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான போரில் உக்ரேன் போராளிகளுடன் ஆஸ்திரேலிய குடிமக்கள் சேர வேண்டாம் என்றும் மோரிசன் வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் வெளிநாட்டுப் போராளிகளுக்கான சட்டங்கள் இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றார் அவர்.
'ஸ்டிங்கர்' எனும் தரையிலிருந்து விமானத்தைத் தாக்கும் ஏவுகணைகள், கவச வாகனங்களுக்கு எதிரான ஆயுதங்கள் உள்ளிட்ட வற்றை உக்ரேனுக்கு அனுப்புவதற்கு இத்தாலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவை ருமேனியா அல்லது போலாந்து வழியாக உக்ரேனுக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நெதர்லாந்தும் 200 ஸ்டிங்கர் ஏவுகணைகளை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது.
ஸ்வீடன் 5,000 கவச வாகனங்களுக்கு எதிரான ஆயுதங்களை அனுப்ப உறுதியளித்துள்ளது, அதே நேரத்தில் பின்லாந்து 1,500 ராக்கெட் லாஞ்சர்கள், 2,500 துப்பாக்கிகளை அனுப்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்கவுள்ளன. பல்கேரியா 30 விமானங்களையும் போலந்து 28 விமானங்களையும் ஸ்லோவாக்கியா 12 விமானங்களையும் வழங்கவுள்ளதாக உக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையில், பெல்ஜியம் உக்ரேனுக்கு 3,000 இயந்திர துப்பாக்கிகள், 200 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

