உக்ரேனின் துணை ராணுவப் படையில் சேர்ந்துள்ள இந்திய மாணவரான சாய்நிகேஷ், சொந்த ஊரான கோயம்புத்தூர் திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாக அவருடைய தந்தை ரவிச்சந்திரன், 52, கூறியுள்ளார்.
"மத்திய அரசாங்க அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். எங்களுடைய மகனைக் கண்டுபிடித்து அவனை விரைவில் மீட்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்," என்று தொலைபேசியில் செய்தியாளர்களிடம் திரு ரவிச்சந்திரன் சனிக்கிழமை (மார்ச் 12) கூறினார்.
உக்ரேனின் கார்கிவ் நகரில் விமானவியல் பொறியியல் துறையில் படித்து வந்தார் சாய்நிகேஷ்.
மூன்று நாள்களுக்கு முன்பு தம்முடைய மகனை திரு ரவிச்சந்திரன் கடைசியாக தொடர்புகொண்டிருந்தார்.
"நாடு திரும்ப அவன் ஒப்புக்கொண்டான். ஆனால், மூன்று நாள்களாக அவனை என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. மத்திய அரசாங்க அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். உக்ரேனில் இருந்து எங்களுடைய மகன் பாதுகாப்பாக மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்," என்றார் திரு ரவிச்சந்திரன்.

