ரோம்: ரஷ்ய செல்வந்தர் ஆண்ட்ரே இகொரெவிச் மெல்னிச்செங்கோவிற்குச் சொந்தமான 'சூப்பர்யோட்' எனும் ஒரு வகை கப்பலை இத்தாலிய காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டியோருக்காக ஐரோப்பிய ஒன்றியம் வரைந்துள்ள பட்டியலில் சில நாள்களுக்கு முன் மெல்னிச்செங்கோ சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இத்தாலியின் ட்ரியெஸ்டே துறைமுகத்தில் இருந்த அவரின் கப்பல் முடக்கப்பட்டுள்ளது.
'செய்லிங் யோட் ஏ' என்ற பெயரைக் கொண்ட இந்தக் கப்பலின் நீளம் 143 மீட்டர். இது, உலகின் ஆகப் பெரிய 'செய்லிங் யோட்' சொகுசுக் கப்பல் என்று இத்தாலிய அரசாங்கம் தெரிவித்தது.
ரஷ்யாவைச் சேர்ந்த பல செல்வந்தர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, வர்த்தகம் செய்ய உகந்த நாடு என்று ரஷ்யாவிற்கு இருந்த அங்கீகாரத்தை ஜி7 கூட்டணி மீட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதைத் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் மீன் வகைகள், மதுபானம், வைரம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நடவடிக்கைகள் ரஷ்யாவிற்குப் பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று திரு பைடன் கூறினார். உக்ரேன் மீது படையெடுத்ததற்கு ரஷ்யா மீது பிறப்பிக்கப்பட்டு வரும் தடை உத்தரவுகளில் இவை அடங்கும்.
தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படவேண்டிய ரஷ்ய செல்வந்தர்கள் பட்டியலில் மேலும் சிலரை அமெரிக்கா சேர்க்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

