சிட்னி: ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவர்கள், கொவிட்-19ஐ சளிக்காய்ச்சலைப் போல் கருதி இயல்புநிலைக்குத் திரும்பும் எண்ணம் கொண்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். எனினும், இதன் தொடர்பில் சுகாதார வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் கொள்ளைநோய்ப் பரவல் செயற்திட்டத்தின்கீழ் கட்டம் 'டி', கொவிட்-19 பரவலை சகித்துக்கொண்டு இயல்புநிலைக்குத் திரும்புவதைக் குறிக்கும். அந்தக் கட்டத்திற்கு முன்னேறுவது குறித்து தமது மத்திய, மாநிலத் தலைவர்களுடன் கலந்துபேசியதாகத் திரு மோரிசன் செய்தியாளர்களிடம் சொன்னார்.
"நமது விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, அனைத்துலகப் பயணிகள் இங்கு வருகை தரமுடியும், ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளன, ஆகையால் இப்போதே நாங்கள் கட்டம் 'டி'க்குள் காலடி எடுத்து வைத்துவிட்டோம் எனச் சொல்லலாம்," என்று திரு மோரிசன் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்றுக்கு ஆளானோருடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளவேண்டும். இந்த நிபந்தனையை அகற்றுவது குறித்து ஒரு வல்லுநர் குழுவிடம் ஆலோசனை கேட்கப்போவதாகவும் திரு மோரிசன் தெரிவித்தார்.
இந்த நிபந்தனையால் வர்த்தகர்களுக்கு மனிதவளப் பற்றாக்குறை ஏற்பட்டதை அவர் சுட்டினார்.
"இப்போதே நாங்கள் கட்டம் 'டி'யில் இருப்பதாகக் கருதுகிறோம், ஆனால் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. கட்டம் 'டி' என்பது இந்தக் கிருமியை சளிக்காய்ச்சலைப் போல் கருதி வாழ்வது என்பதை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்," என்று திரு மோரிசன் கூறினார்.

