விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
9952dfa4-8a7e-4c48-8409-f0fdf051e5f3
-

சிக்கலில் தவிக்கும் செல்சி

லண்டன்: ரஷ்ய செல்வந்தர் ரோமன் அப்ரேமொவிச்சுக்குச் சொந்தமான செல்சி காற்பந்து அணி தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. இப்போது செல்சியில் இயக்குநர் பதவியிலிருந்தும் அப்ரேமொவிச் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நிர்வாகக் குழு அவரைப் பணிநிக்கம் செய்தது. பிரிட்டனில் அப்ரேமொவிச்சின் சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டன. அதனால் செல்சி விளையாடும் ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை விற்பது, அணி விளையாட்டாளர்களை வாங்குவது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மேலும், செல்சியின் கடன் அட்டை சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சாலா பேச்சுவார்த்தையில் பிரச்சினை

லிவர்பூல்: நட்சத்திர விளையாட்டாளர் மோ சாலாவை இன்னும் சில ஆண்டுகளுக்கு லிவர்பூல் காற்பந்து அணியில் இருக்க வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் தொடர்பில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான லிவர்பூலுக்கும் சாலாவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி போகவில்லை.

தொடர்ந்து லிவர்பூலுக்கு விளையாடுவதுதான் எகிப்தைச் சேர்ந்த சாலாவின் விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், லிவர்பூல் சாலாவுக்கு வழங்கவிருக்கும் சம்பளம் திருப்தி அளிக்கவில்லை என்று அவரின் வர்த்தக விவகார முகவர் ராமி அப்பாஸ் இசா கூறினார்.

29 வயது சாலா அடுத்த ஆண்டுவரை லிவர்பூலுக்கு விளையாட தற்போது நடப்பில் உள்ள ஒப்பந்தம் வழிவகுக்கிறது. புதிய ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் லிவர்பூல் ரசிகர்கள்.

கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

ஹேமில்ட்டன் (நியூசிலாந்து): பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை வென்றுள்ளது. இப்போட்டியில் இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களில் இரண்டை இந்தியா வென்றுள்ளது.

50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ஓட்டங்களைக் குவித்தது இந்தியா. 40.3 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது. இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் அணியால் சமாளிக்க முடியவில்லை.

இந்தியாவுக்கு முதலில் பந்தடித்த ஸ்ம்ரித்தி மந்தானா, துணை அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் ஆளுக்கு 100 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சிறப்பாக விளையாடினர். மந்தானா 123 ஓட்டங்களை எடுத்தார். 109 ஓட்டங்களை எடுத்தார் ஹர்மன்ப்ரீத் கோர்.