ஜெனீவா: கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் நெருக்கடியை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பதை ஆராய உலகச் சுகாதார நிறுவனத்தின் பொதுச் சுகாதார வல்லுநர்கள் கலந்துபேசத் தொடங்கியிருப்பதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 கிருமி பரவத் தொடங்கி ஈராண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இதற்கான அளவுகோலை நிர்ணயிப்பது வல்லுநர்களின் நோக்கம்.
கொள்ளைநோய்ப் பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கத் தற்போது திட்டமில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது. இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர பூர்த்திசெய்யவேண்டிய அம்சங்களை ஆராய்வதே இலக்கு.
"கொவிட்-19 சூழலுக்கான அனைத்துலக சுகாதார விதிமுறைகள் அவசர நிலைக் குழு, உலகளவில் இருந்துவரும் பொதுச் சுகாதார அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர பூர்த்திசெய்யத் தேவையான அம்சங்களை ஆராய்கிறது," என்று நிறுவனம் மின்னஞ்சல்வழி தெரிவித்தது.
கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக கொவிட்-19 கிருமிப் பரவல் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பல நாடுகள் ஏற்கெனவே இயல்புநிலைக்குத் திரும்பும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. முகக்கவசம் அணிவது, தனிமைப்படுத்துவதற்கான உத்தரவு போன்றவற்றின் தொடர்பிலான விதிமுறைகளை அவை தளர்த்தி வருகின்றன.
பல நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வருகின்றன.
பிரிட்டன் போன்ற நாடுகள் கிட்டத்தட்ட இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டன.
எனினும், ஹாங்காங்கில் மாண்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீனாவில் ஈராண்டுகளில் இல்லாத எண்ணிக்கையில் தினமும் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

