உக்ரேனில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், 57 பேர் காயமடைந்தனர்.
போலந்து உக்ரேன் எல்லைப் பகுதியில் லிவிவ் எனும் நகரில் தளம் அமைந்துள்ளது. தளத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள், 30 எறிபடைகள் பாய்ச்சப்பட்டதாகக் கூறப்பட்டது. சில எறிபடைகளை உக்ரேனிய இராணுவம் வீழ்த்தியது.
அந்தத் தளத்தில் வெளிநாட்டு இராணுவப் பயிற்றுவிப்பாளர்கள் முன்னதாக வேலைபார்த்ததாகவும், தாக்குதல் நடந்தபோது அவர்கள் அங்கு இருந்தார்கள் என தெரியவில்லை எனக் கூறப்பட்டது.
உக்ரேன் நிலவரம் பற்றி மேலும் சில அண்மைத் தகவல்கள்:
- ரஷ்யப் படைகள் தலைநகர் கீயவை ஆக்கிரமிக்க நினைத்தால், அவர்கள் மரணத்தைச் சந்திக்க நேரிடும் என உக்ரேனிய அதிபர் விளோடிமிர் ஸெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். கீயவ் அருகே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் உட்பட ஏழு பொது மக்கள் மாண்டதாக உக்ரேன் தரப்பு சொன்னது. இன்று காலை அங்கு விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது.
- இந்நிலையில் உக்ரேன் மீது கடந்த மூன்று வாரங்களாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் சின்னஞ்சிறு நகர்கள் முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாக ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
- $200 மில்லியன் மதிப்புள்ள இராணுவ ஆயுதங்கள், கருவிகள் ஆகியற்றை அமெரிக்கா உக்ரேனுக்கு அனுப்பவுள்ளது. உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவது தடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
- இத்தாலியில் உக்ரேனியர்கள் பயணம் செய்த ஒரு பேருந்து விபத்துக்குள்ளானது. ஒருவர் மாண்டார், பலர் காயமடைந்தனர். பேருந்தில் 50 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.


