லண்டன்: ரஷ்யாமீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால், அதன் பொருளாதாரத்தில் விழுந்துள்ள அடியைத் தாக்குப்பிடிக்க சீனா உதவும் என்று நம்புவதாக ரஷ்யா கூறியுள்ளது.
"எங்களுடைய தங்கம், வெளி நாட்டு நாணய கையிருப்பில் ஒரு பகுதியை சீன நாணயமான யுவானில் வைத்து உள்ளோம்.
"மேலும் சீனாவுடனான எங்களது வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கத்திய நாடுகள் சீனா மீது என்ன நெருக்கடியை கொடுக்கின்றன என்பதையும் கவனித்து வருகிறோம்.
"நிச்சயமாக, எங்களுடனான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
"ஆனால், சீனாவுடனான கூட்டாண்மை, எங்களிடையேயான ஒத்துழைப்பைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.
"மேலும் மேற்கத்திய சந்தைகள் மூடப்படும் சூழலில், அது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது," என்று ரஷ்யாவின் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் கூறினார்.
ரஷ்யாவின் தங்கம், வெளிநாட்டு நாணய கையிருப்பில் 640 பில்லியன் டாலர்களில் ஏறத்தாழ 300 பில்லியன் டாலர்கள் முடக்கப்பட்டுள்ளதாக சிலுவானோவ் கூறி
னார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, பொருளாதார தடைகளைத் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவிற்கு, பெருமளவு கையிருப்பு உள்ளதாக அவர் கூறியிருந்தார்.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது கடும் பொருளியல் தடைகளை விதித்தன.
மனித உரிமை மீறல்கள் பிரச்சினை தொடர்பாக மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கும் நெருக்கடி கொடுத்து வரும் வேளையில், ரஷ்யா, சீனா இடையேயான ஒத்துழைப்பு கடந்த சில மாதங்களில் வலுவடைந்துள்ளது.

