செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
538a06ab-8794-480f-a1b8-cf2d096833b8
-

ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது சவூதி

ரியாத்: ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியது சவூதி அரேபியா. இது அந்நாடு, 2021ஆம் ஆண்டு முழுவதும் நிறைவேற்றிய 69 மரண தண்டனைகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் ஐஎஸ், அல்-காய்தா, ஹூதி, போன்ற பிற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகம் கூறியது. நாட்டின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தவும் சவூதிக்குள் ஆயுதங்களைக் கடத்தவும் திட்டமிட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மாணவிகள் தலைமுடியைக் கட்டிக் கொள்ள ஜப்பான் பள்ளி தடை

தோக்கியோ: மாணவிகள் தங்கள் தலைமுடியை குதிரைவால் போன்று கட்டிக்கொண்டு, அதாவது 'போனிடெயில்' போட்டுக்கொண்டு பள்ளிக்கு வருவதற்கு ஜப்பான் பள்ளி ஒன்று தடை விதித்துள்ளது. மாணவிகளின் கழுத்தின் பின்பகுதியைப் பார்க்கும் வகையில் உள்ளதால், மாணவர் களிடம் அது சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பள்ளி விளக்கம் அளித்துள்ளது.

இந்த நடைமுறை ஏற்கெனவே பல பள்ளிகளில் உள்ளதாக சொன்னார் ஓய்வுபெற்ற ஆசிரியை மோட்டோகி சுகியாமா. தெற்கு மாநிலத்தின் ஃபுகுவோகாவில் பத்தில் ஒரு பள்ளியில் போனிடெயில் போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக 2020ல் எடுக்கப்பட்ட கருத்தாய்வு ஒன்று கூறுகிறது. ஜப்பானில் மாணவ, மாணவிகள் வெள்ளை உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

சீனாவில் ஈராண்டு காணாத உச்சம்

பெய்ஜிங்: ஓமிக்ரான் திரிபு காரணமாக சீனாவில் கிருமிப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் ஒரே நாளில் 3,393 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 500 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நேற்றுமுன்தினம் பதிவானதைவிட 2 மடங்கு அதிகமாகும். 3 வாரங்களுக்கு முன் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த அன்றாடப் பாதிப்பு தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்: வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமெரிக்க தூதரகம் உள்ள பகுதியில் 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இவை ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலில், புதிதாக கட்டப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தை ஒட்டியுள்ள பகுதிகள் சேதமடைந்ததாகவும் அலுவலகம் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.