லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் போர்ச்சுகல் வீரர் 37 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஜோசப் பிகானின் முந்திய சாதனையை அவர் முறியடித்தார்.
நேற்று அதிகாலை ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டத்தில் மேன்யூவின் ரொனால்டோ அசத்தலான ஹாட்ரிக் கோல் போட்டார்.
மேன்யூவிற்குத் திரும்பியதிலிருந்து தனது முதல் ஹாட்ரிக்கை நிறைவு செய்ததோடு மட்டுமல்லாமல், டோட்டன்ஹாமுக்கு எதிராக சொந்த அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார் ரொனால்டோ.
இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு கோல்களைப் போட்டவுடனேயே, முன்னாள் காற்பந்து வீரர் ஜோசப் பிகானைவிட அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ, இதுவரை 807 கோல்களை அடித்துள்ளார்.
தோரயமாக பிகான் 805 கோல்களைப் போட்டுள்ளார் என்று கட்டுரை ஒன்றில் முன்பு குறிப்பிட்டிருந்த ஃபிஃபா, அதனைச் சாதனை என்று கூறவில்லை.
செக் குடியரசு காற்பந்துச் சங்கம், பிகான் 821 கோல்களை அடித்ததாகக் கூறுகிறது.
ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல் பற்றி டுவிட் செய்திருந்த ஃபிஃபா, அவரின் அதிக கோல் சாதனை என்று எதுவும் குறிப்பிடவில்லை.
பார்சிலியன் வீரர் ரொமாரியோ 772 கோல்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 2003ல் அறிமுகமானதில் இருந்து மெஸ்ஸி 759 கோல்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
மற்றோர் ஆட்டத்தில், பிரைட்டனை 0-2 என்ற கோல்கணக்கில் வென்றது லிவர்பூல். லுயில் டியஸ் போட்ட கோலையடுத்து, பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் சாலா.
பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல சிட்டியுடனான புள்ளிகள் இடைவெளியைத் தொடர்ந்து குறைவாகவே வைத்துள்ளது லிவர்பூல்.

