உக்ரேன் தொடர்பான பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவிற்கு சீனா உதவினால், அது கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீதான தாக்குதலுக்கு சீனாவிடமிருந்து ரஷ்யா ராணுவ உதவியை நாடுவதாக பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்காத சீனா, அமெரிக்கா தவறான செய்திகளைப் பரப்புவதாக கூறியுள்ளது.
இந்நிலையில் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சலிவன், "உலக அளவிலான பொருளாதாரத் தடைகளினால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள அந்நாட்டிற்கு சீன அரசு உதவக்கூடாது. நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் சீனாவிற்கு இதைக் கூறிக்கொள்கிறோம்," என்றார்.

