விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
37723f80-07c4-42ff-9abe-1c833d41d2e1
-

'பயிற்சியில் சரிவர ஈடுபடமுடியவில்லை'

லண்டன்: தன் நாட்டின்மீது ர‌ஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஆஸ்டன் வில்லா காற்பந்துக் குழுவிற்கு எதிராக தாம் கோல் போட்டது குறித்து வெஸ்ட் ஹேம் காற்பந்துக் குழுவின் உக்ரேன் வீரர் ஆண்டிரி யர்மோலென்கோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

மைக்கல் அன்டோனியோவுக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய அவர், "என் நாட்டின் தற்போதைய நிலையில் என் குடும்பத்தினரையும் நாட்டு மக்களையும் நினைத்து என்னால் சரிவர பயிற்சியில் ஈடுபடமுடியவில்லை.

"இந்த ஆட்டம் எந்தளவுக்கு முக்கியமானது என்பது எனக்கு தெரியும். என்னால் இயன்ற அளவுக்கு என் திறனை வெளிப்படுத்தினேன். ரசிகர்கள், சக வீரர்கள், பிரிட்டி‌ஷ் மக்கள் அனைவரும் எனக்கும் உக்ரேன் மக்களுக்கும் ஆதரவாக இருப்பதற்கு நன்றி," என்றார் அவர்.

82வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேம் இன்னொரு கோலும் கடைசி நிமிடத்தில் ஆஸ்டன் வில்லா ஆறுதல் கோலும் போட, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது வெஸ்ட்ஹேம்.

'சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவோம்'

லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் என்று அதன் நிர்வாகி அர்டெட்டா நம்புகிறார். பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் லெஸ்டர் குழுவை 2-0 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வென்ற பிறகு பேசிய அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் நான்காவது இடத்தைப் பிடித்தது ஆர்சனல். "எங்கள் வரலாற்றின்படி, கண்டிப்பாக சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெறுவோம். ஆனால், அதற்குத் தகுதி பெற இன்னும் நிறைய ஆட்டங்கள் விளையாட வேண்டியுள்ளது," என்றார் அர்டெட்டா.

1998-99ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 19 பருவங்களாக ஆர்சனல் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வருகிறது.

கடைசி நிமிட கோலால் செல்சி வெற்றி

லண்டன்: இபிஎல் காற்பந்து ஆட்டமொன்றில், நியூகாசலுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் கோல் போட்டு 1-0 என வெற்றி பெற்றது செல்சி. ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் சமநிலை கண்டுவிடும் நிலையில் இருந்தது. ஆனால் 89வது நிமிடத்தில் கை ஹவெர்ட்ஸ் கோல் போட்டு செல்சியை வெற்றி பெறச் செய்தார். முற்பாதி ஆட்டத்தில் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டிய ஹவெர்ட்சின் கோலை ஏற்றுக்கொள்வது நியூகாசலுக்கு சிரமமாகதான் இருந்தது. நியூகாசலின் டன் பர்னைப் பிடித்துத் தள்ளியதற்காக ஹவெர்ட்ஸ் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்கிறது நியூகாசல். மாறாக, அவருக்கு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டது.

ஐசிசி தரவரிசை: முதல் ஐந்து இடங்களில் பும்ரா, ரி‌ஷப் பன்ட்

துபாய்: அனைத்துலக கிரிக்கெட் மன்றம் எனப்படும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர்கள் முதல் ஐந்து இடத்துக்கு முன்னேறியுள்ளனர். பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா 38 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திலும் பந்தடிப்பாளர்கள் தரவரிசையில் ரிஷப் பன்ட்

517 ஓட்டங்களுடன் 4வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

இலங்கை தொடரில் சோபிக்க தவறிய விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் இருந்து கீழிறங்கினர்.