யங்கூன்: மியன்மாரில் சென்ற ஆண்டு நடத்த ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் சரிவடைந்தது. அதனை மேலும் மோசமாக்கும் வகையில், அங்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்கு எரிவாயு விலை உயர்வு, ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களின் தாக்குதல்களே காரணம் என்றது ஆட்சிக் குழு.
யங்கூன் மக்கள் இப்போது தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
"கரித்துண்டுகளைக் கொண்டு சமைத்துவிடுவோம், ஆனால் தண்ணீர் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது," என்றார் குடியிருப்பாளர் ஒருவர்.
"கோடைகாலத்தில் மின்வெட்டும் தண்ணீர் பிரச்சினையும் வழக்க மானதுதான். ஆனால், இந்த ஆண்டு மிகவும் மோசமாக உள்ளது," என்றார் தண்ணீர் விநியோக அமைப்பு ஒன்றின் தலைவர்.
ராணுவ ஆட்சியைப் புறக்கணிக்கும் வகையில், மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால், மக்கள் மின்வெட்டை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று மின்வாரியம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

