உக்ரேன் போர்: ஆக அண்மை நிலவரம்

உக்ரேன் போர்: ஆக அண்மை நிலவரம்

1 mins read
2ca1322c-49ab-481a-bc8e-afc13446a088
படங்கள்: ராய்ட்டர்ஸ், எஃபி -
multi-img1 of 3

உக்ரேன் தலைநகர் கியவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அண்மைய நாள்களில் ர‌ஷ்யப் படைகள் கியவில் தாக்குதல்களை முடக்கியுள்ளன.

தாக்கப்பட்ட 16 மாடி கட்டடத்தில் தீ மூண்டது. கட்டடத்திலிருந்து 27 பேர் மீட்கப்பட்டனர். தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, சிதைவுகளிலிருந்து இரண்டு சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.

கீயவில் இன்று காலை மூன்று பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூறினர். பல இடங்களில் கருகிய கட்டடங்களிலிருந்து புகை வரும் காட்சிகள் தெரிவிதாக அவர்கள் குறிப்பிட்டனர். எங்குப் பார்த்தாலும், சிதைவுகளும், கண்ணாடித் துண்டுகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உக்ரேனிய அதிபர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி ஒரு கா‌ணோளி வழியாக ஆற்றிய உரையில் ர‌ஷ்யா போரில் வெல்லப்போவதில்லை என்று உணர்ந்துவருவதாகக் கூறினார். இதன் மூலம் ர‌ஷ்யர்கள் எதையும் அடையப்போவதில்லை என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்ற தொடங்கியுள்ளதாக ஸெலன்ஸ்கி சொன்னார். இருநாடுகளுக்கிடையே நடந்த ஆக அண்மைய பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் இருப்பதாக அவர் கூறினார்.

உக்ரேன் நிலவரம் பற்றி மேலும் சில அண்மைத் தகவல்கள்:

  1. ர‌ஷ்யாவிடமிருந்து எரிசக்திப் பெறுவதை மேற்கத்திய நாடுகள் குறைத்துக்கொள்ளவேண்டுமென பிரிட்டி‌ஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார். ர‌ஷ்ய எரிசக்தியை அதிகம் நம்பியிருப்பதால், அதை ர‌ஷ்ய அதிபர் விளாடிமில் புட்டின் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக திரு ஜான்சன் குறிப்பிட்டார்.
  2. உக்ரேனில் போரிக்கு மத்தியில் அரசாங்க அமைப்புகள், வங்கிகள் ஆகியவை தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், கூடிய விரைவில் அந்நாடு பொருளியல் மந்தநிலைக்குத் தள்ளப்படும் சாத்தியம் உள்ளதாக அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் உணவு விலைகள், கோதுமையைப் பயிரட முடியாமல் இருப்பது போன்ற காரணங்களால் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என நிதியம் எச்சரித்தது.
  3. சீனா ர‌ஷ்யாவுக்கு உதவக்கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. உக்ரேன் மீது படையெடுக்கத் தொடங்கியபோது, ர‌ஷ்யா சீனாவிடமிருந்து ஆயுதங்கள் கேட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்தத் தகவலை சீனா பொய் தகவல் என சாடியுள்ளது.
  4. உக்ரேனுக்கு உதவ உலக வங்கி $200 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது. சென்ற வாரம் உக்ரேனுக்கு $723 மில்லியன் உதவிநிதி வழங்கவுள்ளதாக வங்கி குறிப்பிட்டிருந்தது.
  5. இதனிடையே, ர‌ஷ்யா தேசியத் தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிபரப்பை ஓர் ஆர்ப்பாட்டக்காரர் குறுக்கீட்டார். 'போர் வேண்டாம். போரை நிறுத்தவும்' என்ற அட்டையை அவர் கேமரா முன் காட்டினார்.
Watch on YouTube