ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத் தின் 19வது முதலமைச்சராக ஒன் ஹஃபிஸ் காஸியை ஜோகூர் சுல்தான் நியமித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 40ஐ கைப்பற்றி அது அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் நியமனம் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.
சட்டமன்றத் தேர்தலில் வென்றால் முன்னாள் முதலமைச்சர் ஹஸ்னி முகம்மது மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்படுவார் என தேசிய முன்னணி பிரசாரம் செய்து வந்தது.
ஆனால், ஒன் ஹஃபிஸ் காஸியை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் நியமித்தார். தொடர்ந்து, நேற்று மாலையே அவர் சுல்தான் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
43 வயதான திரு ஒன், அம்னோ நிறுவனரும் ஜோகூர் மாநிலத்தின் ஏழாவது முதலமைச்சருமான ஒன் ஜாஃபரின் கொள்ளுப்பேரன் ஆவார். சனிக்கிழமை நடைபெற்றத் தேர்தலில் மாச்சாப் சட்டமன்றத் தொகுதியில் 6,543 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வென்றார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வென்றதைத் தொடர்ந்து ஜோகூர் மாநில முதலமைச்சர் பதவி முதல்முறையாக அம்னோவிடமிருந்து நழுவிச் சென்றது. அம்னோ உருவான மாநிலம் ஜோகூர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்ற தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 13 இடங்களில் மட்டுமே வென்றது.
இதற்கிடையே, முன்னாள் எதிர்த்தரப்பு பிரபலம் ரஃபிஸி ரம்லி, 44, மீண்டும் அரசியலுக்குத் திரும்பி உள்ளார், ஜோகூர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அவரது அரசியல் பயணம் மீண்டும் தொடங்கி உள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிகேஆர் கட்சியையும் அது இடம் பெற்றுள்ள பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியையும் வலுவுடன் தயார்ப் படுத்த தாம் அரசியலுக்குத் திரும்பி உள்ளதாக ரஃபிஸி கூறினார்.

