உக்ரேனில் ஒவ்வொரு நொடியும் கிட்டத்தட்ட ஒரு பிள்ளை அகதியாவதாக ஐக்கிய நாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியது முதல், கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிறார்கள் உக்ரேனைவிட்டு வெளியேறியுள்ளனர்.
"கடந்த 20 நாள்களில் நாள்தோறும் சராசரியாக 70,000க்கும் அதிகமான சிறார்கள் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறுகின்றனர்," என்று ஐக்கிய நாட்டு அமைப்பின் சிறார் பிரிவான யூனிசெஃப் தலைவர் திரு ஜேம்ஸ் எல்டர் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"இந்தக் கணக்கின்படி நிமிடத்திற்கு 55 பிள்ளைகள் வெளியேறுகின்றனர். அதாவது நொடிக்கு கிட்டத்தட்ட ஒரு பிள்ளை," என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்படும் பொருளியல் மெதுவடைவாலும் பணவீக்கத்தாலும் உலகப் பொருளியல் பாதிப்படையும் என்று அனைத்துலக பண நிதியம் தெரிவித்தது. மனிதநேயத்துக்கு ஏற்படும் மோசமான பாதிப்பு மட்டுமின்றி உணவு, எரிபொருள்களின் விலைகளும் உக்ரேன்-ரஷ்யா போரால் அதிகரித்துள்ளன.
அத்துடன், வர்த்தகம், தளவாடத் தொடர்கள், பணம் அனுப்பும் சேவைகள் ஆகியவற்றிலும் உக்ரேனின் அண்டை நாடுகள் பாதிப்பை உணர்வதாக பண நிதியம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டது.


