நியூசிலாந்து அதன் எல்லைகளை அடுத்த மாதம் திறக்கவுள்ளது. தொற்றுக் காரணமாக கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக அந்நாடு உலகிலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தது.
வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்க நியூசிலாந்து தயார் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியுள்ளார். பயணிகளுக்கு அந்நாடு ஒரு பாதுகாப்பான அனுபவத்தைத் தரும் என தாம் நம்புவதாக ஆர்டன் குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பயணிகள் ஏப்ரல் 12லிருந்து அங்குச் செல்லலாம்.
அடுத்தக் கட்டமாக நியூசிலாந்துக்குப் பயணம் செய்ய விசா தேவையில்லாத நாடுகளான சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மே முதல் தேதியிலிருந்து நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
அனைத்து பயணிகளும் பயணத்துக்கு முன்னும், நியூசிலாந்தைச் சென்றடைந்தவுடன் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும்.
பயணிகளின் வருகை நாட்டின் சுற்றுலாத் துறையைத் தூக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

