உலகளவில் குறைந்து வந்த கொவிட்-19 தொற்று இப்போது மீண்டும் அதிகரிப்பு

உலகளவில் குறைந்து வந்த கொவிட்-19 தொற்று இப்போது மீண்டும் அதிகரிப்பு

1 mins read
6d67263b-3a9b-4d1b-b3c5-aad2e62355cf
இந்தியாவில் 12-14 வயது வரையுள்ளோருக்கான தடுப்பூசித் திட்டம் தொடங்கியுள்ளது. படம்: இபிஏ -

ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமி, உலகம் முழுவதும் இன்னமும் தீவிரமாகப் பரவி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணரான மரியா வேன் கெர்கொவ் கூறியுள்ளார்.

ஈராண்டுகளில் அதன் மிக மோசமான கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த சீனா முயற்சி செய்துவரும் வேளையில், மரியா இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.

பல வாரங்களாக குறைந்து வந்த கொவிட்-19 தொற்று இப்போது மீண்டும் ஏறுமுகம் கண்டு வருவதாக அவர் சொன்னார். பரிசோதனை கணிசமாகக் குறைந்துள்ளபோதும் தொற்று அதிகரிப்பதை அவர் சுட்டினார்.

கொவிட்-19க்கு எதிராக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பகுதிகளில் தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என மரியா எச்சரித்துள்ளார்.

"இது ஆச்சரியப்படுவதற்கு அல்ல. ஏனெனில், கடும் நோய்ப் பாதிப்பும் மரணமும் ஏற்படுவதற்கான சாத்தியத்தைத் தடுப்பூசிகள் குறைக்கும், ஆனால் தொற்றை அல்ல," என்று அவர் விவரித்தார்.

உலகளவில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமியே அதிகம் பரவி வருவதை மரியா உறுதிப்படுத்தினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவின்படி, மார்ச் 7 முதல் 13ஆம் தேதி வரை உலகம் முழுவதும் வாராந்திர தொற்று எண்ணிக்கை 8 விழுக்காடு கூடியது. ஜனவரி இறுதியில் இருந்து அது தொடர்ந்து குறைந்து வந்தது.