கியவ்: உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.
உக்ரேன், நடுநிலையைக் கடைப் பிடிப்பது குறித்து பேச இணங்கிஉள்ளதைத் தொடர்ந்து, அமைதி உடன்பாட்டில் சில அம்சங்களை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்துவரும் ஆகப்பெரிய போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ அமைப்பில் உக்ரேன் சேரக்கூடாது என்றும் அது நடுநிலையை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்துகிறது.
இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சு வார்த்தையை தொடர தயாராக இருப்பதாக உக்ரேன் கூறியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் அனைத்து நிபந்தனைகளுக்கும் அது கட்டுப்படாது எனவும் சரணடையாது எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே, ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரேனிய ஆயுதப் படையினர் பல பகுதிகளில் கடுமையான எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.
ஆனால், எந்தப் பகுதியில் சண்டை தீவிரமாக உள்ளது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
போர் காரணமாக உயரிழப்போர் அதிகரித்து வருவதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் கூறினர். கார்கிவ் நகரில் மட்டும் 500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இதுவரை 103 பிள்ளைகள் மாண்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இப்போர் அடுத்த ஆண்டிற்கும் நீடித்தால், உக்ரேனில் 10ல் ஒன்பது பேர் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று ஐநா மேம்பாட்டு திட்ட அமைப்பு கூறியுள்ளது.
அத்துடன் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளதார வளர்ச்சியை அது முற்றிலும் துடைத்தொழித்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரேனில் ஒவ்வொரு நொடியும் கிட்டத்தட்ட ஒரு பிள்ளை அகதியாவதாகவும் அது தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியது முதல், கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிறார்கள் உக்ரேனைவிட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் பொருளியல் மெதுவடைவதாலும் பணவீக்கத்தாலும் உலகப் பொருளியல் பாதிப்படையும் என்று அனைத்துலக பண நிதியம் தெரிவித்தது.

