வடகொரிய ஏவுகணை நடுவானில் வெடித்து சிதறியது: தென்கொரியா
சோல்: வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று நடுவானில் வெடித்து சிதறியதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. ஏறத்தாழ 20 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அந்த ஏவுகணை வெடித்து சிதறியதாகவும் அதுபற்றி வேறு எந்த தகவலும் இல்லை என்றும் தென்கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்தும் வகையில் வடகொரியா, இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட பத்து முறை ஏவுகணை சோதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் ஆட்சி கவிழும் அபாயம்
லாகூர்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கவிழும் அபாயம் நிலவுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரின் முக்கிய கூட்டாளிகளுமான மூவர் அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இது, இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிக் குழுவுக்கான ஆதரவை அதிகரிக்கும் என்றார் கூட்டணி கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவைட்டின் சவுத்ரி பர்வேஸ் எலாஹி. இக்கட்சி நாடாளுமன்றத்தின் கீழவையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் பேச்சவார்த்தை நடத்தி அவர்களைக் கூட்டணியில் தக்கவைப்பது இனி பிரதமரின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.
விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தோனீசியா கூடுதல் நிதி
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள்கள் விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில், கிருமிப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வரவுசெலவுத் திட்ட நிதியான 154 டிரில்லியன் ருப்பியாவைப் (S$ 14.7 பில்லியன்) பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
சமையல் எண்ணெய் விலையுர்வைக் கட்டுப்படுத்த எடுத்த முதல்கட்ட நடவடிக்கைகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அவர் இதனை அறிவித்துள்ளார்.
உணவு விலையைக் குறைக்க இது எந்த வகையில் பயன்படுத்தப்படும் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. உக்ரேன்-ரஷ்யா சண்டையால் நாட்டில் கோதுமையின் விலையும் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டினார். படம்: ராய்ட்டர்ஸ்

