லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் சாம்பியன்ஸ் லீக் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்பானிய குழுவான அட்லெட்டிகோ மட்ரிட்.
இதையடுத்து, இபிஎல் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிப்பது ஒன்றுதான் இப்பருவத்தில் மேன்யூவிற்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
இக்குழுக்கள் மோதிய முதல் சுற்று ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்திருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில், மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதே மேன்யூவின் இத்தோல்விக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மற்ற அணிகளைக் கையாள்வது போலவே அட்லெட்டிகோ குழுவையும் சமாளிக்க நினைத்தது மேன்யூ. ஆனால், தனது அபாரமான தற்காப்பு ஆட்டத்தில் மேன்யூவை மண்ணைக் கவ்வச் செய்தது அட்லெட்டிகோ மட்ரிட்.
ஆட்டம் முழுவதும் கோல் போடுவதற்கு மேன்யூ பல முயற்சிகளை மேற்கொண்டது. நேரம் போகபோக அக்குழுவிடம் புதிய யோசனைகளும் உத்வேகமும் இல்லாமல் போனதால், மேன்யூவால் ஒரு கோல்கூட முடியவில்லை.
இதற்கிடையே, மேன்யூவின் சொந்த அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் ரெனான் லோடி, அட்லெட்டிகோ மட்ரிட்டின் வெற்றி கோலைப் போட்டார். எனவே, 0-1 என்ற கோல்கணக்கில் வென்ற அட்லெட்டிகோ காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
முன்னதாக, ஆண்டனி எலங்கா மீதான எதிரணியின் தப்பாட்டத்தை, நடுவர்கள் தப்பாட்டம் என்று அறிவிக்காதது மேன்யூவை கோபப்படுத்தியது.
மற்றொர் ஆட்டத்தில், அஜக்ஸ் குழுவிற்கு அதிர்ச்சி அளித்த பென்ஃபிகா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
நேற்றைய ஆட்டம், 0-1 என்ற கோல்கணக்கில் பென்ஃபிகாவிற்குச் சாதகமாக முடிந்தது.
இக்குழுக்களின் முதல் சுற்று ஆட்டம் 2-2 என சமநிலை கண்டிருந்தது.

