கோலாலம்பூர்: மலேசிய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்னோ, அதன் கட்சித் தேர்தல் குறித்த சட்டத்திட்டங்களை மாற்றி அமைக்கிறது.
அம்னோவின் தற்போதைய தலைவர் அகமது ஸாஹித் ஹமிடியின் பதவியைக் காப்பாற்றும் நோக்கிலும் கட்சியின் துணைத் தலைவராக உள்ள மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கட்சியின் தலைவராவதைத் தடுக்கும் வகையிலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அம்னோவில் கட்சித் தலைவராக இல்லாத ஒருவர் மலேசியாவின் பிரதமராக இருப்பது இதுவே முதல்முறை. கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு இந்தக் கட்சித் தேர்தல் அவருக்கு நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.
அம்னோவின் இளையர் பிரிவும் பெண்கள் பிரிவும் இந்த மாற்றத்தை பரிந்துரைத்துள்ளன. இதன்படி, ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் கட்சித் தேர்தலை நடத்த இது வழிவகுக்கும்.
"பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதனால் கட்சியைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் தவிர்க்கப்படும்," என்றார் அம்னோ இளையர் பிரிவு தலைவர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி.
தற்போது, அம்னோ கட்சித் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மலேசியப் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ளது.
ஸாஹித்தின் மூன்றாண்டு பதவிக் காலம், கடந்த ஆண்டு முடிவடைந்ததை அடுத்து கட்சித் தேர்தலை நடத்த இவ்வாண்டு இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மலேசியப் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த அம்னோ நெருக்கடி கொடுக்கக்கூடும்.

