லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற போட்டி இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்றைய ஆட்டமொன்றில் ஆர்சனல் காற்பந்துக் குழுவை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய லிவர்பூல், முதல் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டியுடனான புள்ளி இடைவெளியை ஒன்றாக குறைத்துள்ளது. ஜனவரி மாதத்தில் சிட்டியைவிட 8 புள்ளிகள் பின்தங்கியிருந்த லிவர்பூல், தனது விடாமுயற்சியால் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ள சிட்டிக்கு சிம்மசொப்பனமாக உள்ளது.
முற்பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆர்சனலின் கோல் முயற்சிகள் பலிக்கவில்லை.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 54வது நிமிடத்தில் ஆர்சனல் கோல்காப்பாளரைத் தாண்டி பந்தை வலைக்குள் தள்ளினார் டியகோ ஜோட்டா. அடுத்த எட்டாவது நிமிடத்தில் ரொபர்ட்டோ ஃபெர்மினோ இன்னோரு கோலைப் போட, லிவர்பூல் வெற்றி பெற்றது. இது லிவர்பூல் குழுவின் ஒன்பதாவது தொடர் வெற்றியாகும்.
மற்றோர் ஆட்டத்தில் பிரைட்டன் குழுவை 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.

