பிலிப்பீன்ஸ் வாரத்தில் நான்கு நாள் வேலை செய்யும் முறைக்கு மாறுவது பற்றி பரிசீலித்து வருகிறது.
ரஷ்ய உக்ரேனிய போரால் எரிவாயு விலைகள் உயர்ந்துகொண்டு வரும் நிலையில், எரிசக்தியை மிச்சப்படுத்த பிலிப்பீன்ஸ் அந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கிறது.
பிலிப்பீன்சில் விலைவாசி உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சிரமத்தைத் தந்துள்ளது.
அங்கு குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தவும் வாகன ஓட்டுநர்களுக்கு கூடுதல் உதவி அளிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரத்தில் ஐந்து நாள் வேலைக்குப் பதிலாக நான்கு நாள் வேலையை நடப்புக்குக் கொண்டுவரும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால் ஊழியர்கள் நாளுக்கு எட்டு மணிநேரம் வேலை செய்யாமல், 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சமூகப் பொருளியல் திட்டத் துறை அமைச்சர் கார்ல் கென்ட்ரிக் சுவா கூறியுள்ளார்.
இத்திட்டம் அரசாங்க ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும், தனியாரும் இதை நடைமுறைப் படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே இதுகுறித்து திங்கள் அன்று முடிவு எடுப்பார் என்று பிலிப்பீன்ஸ் டெய்லி இன்குவாய்ரர் நாளிதழ் தெரிவித்தது.
கடந்த 2008ம் ஆண்டிலும் வளைகுடா போரின்போதும் பிலிப்பீன்ஸ் நான்கு நாள் வேலை முறைக்கு மாறியது.

