செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2d5171fb-0b5a-4243-9f16-d2807358d2e6
-

86.6% இந்தோனீசியர்களுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஏறத்தாழ பாதி பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும், அங்கு 86.6 விழுக்காட்டு மக்களுக்கு கிருமித்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றுக்கு எதிரான பொதுக்கொள்கையை உருவாக்குவதற்காகவும் எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்காகவும் சென்ற நவம்பர், டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 99.1 விழுக்காட்டினரிடமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில்

73.9 விழுக்காட்டினரிடமும் ஆன்டிபாடிகள் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.



போலி தடுப்பூசி விலக்கு சான்றிதழ்; ஹாங்காங் மருத்துவருக்கு வலை

ஹாங்காங்: ரகசிய போலிஸ் ஒருவருக்கு போலி தடுப்பூசி விலக்குச் சான்றிதழ் அளித்த மருத்துவர் ஒருவரை ஹாங்காங் அரசாங்கம் தேடப்படும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளது. 800 ஹாங்காங் டாலருக்கு போலிச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் முதல், பல நூறு பேருக்கு போலிச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு ஹாங்காக் திரும்பாத அந்த மருத்துவர் இணையம் வழி நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணிபுரிந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிற்றரசு தலைவர்களைச் சந்தித்த சிரியா அதிபர் அசாத்

சிரியா அதிபர் பஷீர் அல்-அசாத், ஐக்கிய அரபு சிற்றரசின் துணை அதிபர் ‌ஷேக் முகமது ர‌‌ஷித்தைச் சந்தித்தார். படம்: இபிஏ

துபாய்: சிரியா அதிபர் ப‌ஷீர் அல்-அசாத் ஐக்கிய அரபு சிற்றரசின் ஆட்சியாளர் முகமது பின் ஸாயித்தையும் துணை அதிபரும் பிரதமருமான ‌ஷேக் முகமுது ர‌ஷீத்தையும் சந்தித்து பேசினார்.

2011ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியா அதிபரின் முதல் சிற்றரசு பயணம் இதுவாகும். வளைகுடா தலைவர்கள் டமாஸ்கஸை மீண்டும் அரபு நாடுகளுக்குள் இணைப்பதற்குத் தயாராக உள்ளதற்கான அடையாளமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ர‌ஷ்யாவைத் தனிமைப்படுத்த, அரபு நட்பு நாடுகளை ஒன்றிணைக்க பைடன் போராடி வரும் நிலையில், இச்சந்திப்பு அமெரிக்காவின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

சிரியா அதிபர் அசாத், ர‌ஷ்ய அதிபர் புட்டினின் முக்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.