கொழும்பு: இலங்கையில் இறக்குமதிக்குத் தேவையான டாலர் கையிருப்பு இல்லாத நிலையில், அச்சிடுவதற்கான தாளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களின் தவணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1948ல் சுதந்திரமடைந்த பிறகு, ஆக மோசமான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது இலங்கை.
வரும் திங்கட்கிழமை தொடங்கவிருந்த தவணை தேர்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக கல்வித் துறை அதிகாரிகள் நேற்று சொன்னர்.
"தாள், மையை வாங்குவதற்குத் தேவையான, வெளிநாட்டு நாணயத்தை அச்சிடுபவர்களால் பெற முடியாத காரணத்தால், பள்ளித் தேர்வுகளை நடத்தமுடியவில்லை," என்று மேற்கு மாநில கல்வித் துறை தெரிவித்தது. இதனால் அந்நாட்டின் 4.5 மில்லியன் மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாதிக்கப்படுவர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலைவாசி உயர்வால், இலங்கையில் உணவுப் பொருள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பொருள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

