பெல்ஜியத்தில் ஊர்வலத்திற்காகத் தயாராகிக்கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த வாகனம் மோதியது. இதில் ஆறு பேர் மாண்டனர். 10 பேருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் இல்லை என்று காவல் துறை நம்புகிறது.
அசம்பாவிதம் நடந்தபோது, கிட்டத்தட்ட 200 பேர் சாலையில் கூடியிருந்ததாகக் கூறப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஊர்வலத்தில் கலந்துகொள் அவர்கள் அங்கு வந்திருந்தனர்.
வேகமாக வந்த வாகனம் கூட்டத்தில் மோதி நிற்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
வாகனம் பின்னர் இடைமறிக்கப்பட்டு, அதில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை வேரோடு களைய பெல்ஜிய அரசாங்கம் கடந்த ஏழு ஆண்டுகளாக முயன்றுவருகிறது.
2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலுக்கும் 2016ஆம் ஆண்டு பிரஸ்சல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் பிரஸ்சல்சைச் சேர்ந்த ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. அவ்விரு தாக்குதல்களில் 160க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

