உக்ரேனில் ரஷ்யா தாக்குதலை அதிகப்படுத்தி இருக்கிறது. உக்ரேனியப் படைகள் கடும் எதிர்ப்பைக் கொடுத்து வருகின்றன. இதனால் அந்த நாட்டில் மனிதாபிமானப் பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதாக தகவல்கள் கூறின.
முற்றுகையிடப்பட்டுள்ள மரியபோலுக்குள் நுழைய ரஷ்யா தாக்குதலை வேகப்படுத்தியது. அதேவேளையில், மேற்கு உக்ரேனில் ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணைகள் வெடித்து பாதாள ராணுவ வெடிமருந்துக் கிடங்கு நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேன் நிலவரம் பற்றி மேலும் சில அண்மைத் தகவல்கள்:
- மிகோலாய் என்ற நகரில் எறிபடைகளைக் கொண்டு ரஷ்யா நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த நகரில் ரஷ்யா நேற்றும் தொடர்ந்து விமானத் தாக்குதல் நடத்தியது.
- உக்ரேனும் ரஷ்யாவும் இடையே முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக, உடன்பாட்டை நெருங்குவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை அடைந்த முன்னேற்றங்களில் இருந்து இரு நாடுகளும் பின்வாங்கவில்லை என்றால், போர் விரைவில் முடிவடையும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.
- உக்ரேன் போரில் 14,000 ரஷ்யப் படைவீரர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு மாறி இருக்கிறார்கள்.
- ரோமில் உள்ள வத்திகன் சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உக்ரேனிய சிறுவர்களை போப் ஆண்டவர் ஃபிரான்சிஸ் நேரில் சந்தித்தார். மருத்துவமனையில் 19 உக்ரேனிய சிறுவர்கள் உள்ளனர். அவர்களுடன் கைகுலுக்கி சிரித்துப் பேசினார் போப் ஆண்டவர். போர் தொடங்கியதிலிருந்து ஏறக்குறைய 50 சிறுவர்கள் அம்மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வத்திகன் தெரிவித்தது. பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சதுக்கத்தில் பேசிய போப் ஆண்டவர், உக்ரேனில் ரஷ்யா நடத்தும் தாக்குதல்கள் அர்த்தமற்ற வன்முறை எனக் கூறினார். ஒவ்வொரு நாளும் அங்குக் கொடுமைகளும், படுகொலைகளும் நடப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று அவர் சொன்னார். போரை உடனடியாக நிறுத்த உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

