கோலாலம்பூர்: கட்சித் தாவல் தடுப்பு சட்ட மசோதா குறிப்பிட்ட காலவரையறைக்குள் மக்களவையில் தாக்கல் செய்யப்படாவிட்டால், மலேசிய அரசாங்கத்துடன் எதிர்க்கட்சிகள் செய்துகொண்ட கருத்திணக்க உடன்பாடு ரத்து செய்யப்படும் என ஜனநாயக செயல் கட்சியின் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.
இது, மலேசியப் பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக, தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
"கட்சித் தாவல், நாட்டில் ஜனநாயக நடைமுறையை முழுமையாக சீரழித்திருக்கிறது. எனவே அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென அரசாங் கத்தை பக்கத்தான் ஹரப்பான் வலியுறுத்தி இருப்பதாக," லிம் குவான் எங் தெரிவித்தார்.
சட்ட விவகார அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபார், கட்சித் தாவல் தடுப்பு சட்டமசோதா மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட மேலும் விரிவான ஆய்வு தேவைப்படுவதாகக் கூறியிருந்தார்.
இதற்கிடையே, நேற்று நடைபெற்ற அக்கட்சித் தேர்தலில், புதிய தலைமை செயலாளராக ஆண்டனி லோக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலை எதிர்கொள்ள புதிய தலைமைக்கு வழிவிட, லிம் குவான் எங் அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இத்தேர்தல் நடத்தப்பட்டது.

