லிவிவ்: மரியபோல் நகரில் நிலைமை மிகவும் சவாலாக இருந்து வருவதாக உக்ரேன் கூறியுள்ளது. பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்புப் பாதையைத் தன்னால் அமைக்க முடியவில்லை என்று அது சொன்னது. சரணடைய ரஷ்யா கொடுத்த கெடுவை உக்ரேன் ஏற்றுக்கொள்ளாததைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மரியபோலில் ஒரு பெரிய மனிதாபிமான நெருக்கடி நிலவுவதாக ரஷ்யா முன்னதாக எச்சரித்தது. அதனால் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 11 மணிக்குள் சரணடையுமாறு அந்நகர வாசிகளுக்கு அது கெடு விதித்தது.
அதை ஏற்றுக்கொள்ளாதோருக்குப் பாதுகாப்புப் பாதைவழி வெளியேற அனுமதி வழங்கப்படாது என்றும் ரஷ்யா குறிப்பிட்டது.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிக முன்னேற்றம் இல்லை என்று கிரெம்ளின் தெரிவித்தது. பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்குப் பொருந்தாத பரிந்துரைகளை கியவ் முன்வைத்து வருவதாக மாஸ்கோ குறைகூறுகிறது.
தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும் சரணடையவோ ரஷ்யா விடுக்கும் கெடுவை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை என்று உக்ரேன் சொல்கிறது.
இதற்கிடையே, ரஷ்யா மீது மேலும் சில தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பது குறித்து கலந்துபேச ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்கள் சந்திக்கத் திட்டமிட்டனர். கச்சா எண்ணெய் தொடர்பிலும் ரஷ்யா மீது தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பது குறித்து அவர்கள் ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

