ஜகர்த்தா: இந்தோனீசியா வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்துவதற்கான உத்தரவை அகற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஈராண்டுகளாக நடப்பில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
பொதுவாக தென்கிழக்காசிய நாடுகள் ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவல் அலையிலிருந்து மீண்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தனது அண்டை நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதையொட்டி இந்தோனீசியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
தனிமைப்படுத்திக்கொள்ளும் நிபந்தனையின்றி பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாட்டை இந்தோனீசிய அரசாங்கம் அந்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நீட்டிக்கிறது.
எனினும், கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்யும் பரிசோதனை முடிவுகளைப் பயணிகள் காட்டவேண்டும் என்று அந்நாட்டின் பயணத்துறை அமைச்சர் சண்டியாகோ உனோ தெரிவித்தார்.
பாலி, பிந்தான், பாத்தாம் ஆகிய தீவுகளுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளும் உத்தரவின்றி பயணம் மேற்கொள்ளும் ஏற்பாடு சோதித்துப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு இதர பகுதிகளுக்கும் செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பொருளியலான இந்தோனீசியா, கொவிட்-19 கட்டுப்பாடுகளைப் படிப்படியாக அகற்றி வந்துள்ளது. உள்ளூரில் விமானப் பயணம் மேற்கொள்வோர் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பரிசோதனை முடிவுகளைக் காட்டத் தேவையில்லை என்றும் ஆக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
சென்ற மாதம் நடுப் பகுதியிலிருந்து இந்தோனீசியாவின் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
இவ்வாண்டின் ஜி20 மாநாட்டை இந்தோனீசியா ஏற்று நடத்துகிறது. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது அந்த மாநாட்டை நடத்த அதற்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

