எஃப்ஏ கிண்ணப் போட்டி அரையிறுதியில் சிட்டி, லிவர்பூல்
சவுத்ஹேம்ப்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் மான்செஸ்டர் சிட்டியும் லிவர்பூலும் மோதவுள்ளன. இரு அணிகளும் தங்களின் காலிறுதிச் சுற்று ஆட்டங்களில் வெற்றிகண்டன.
சிட்டி, சவுத்ஹேம்ப்டனை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆட்டத்தில் சிறப்பாக ஆடிவந்த சவுத்ஹேம்ப்டன், ஒரு கட்டத்திற்குப் பிறகு களையிழந்துபோனது.
மற்றொரு காலிறுதியாட்டத்தில் 'சாம்பியன்ஷிப்' எனும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிற்கு அடுத்த நிலையில் இருக்கும் லீக்கில் போட்டியிடும் நோட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை 1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
இந்தப் பருவத்தில் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல சிட்டியும் லிவர்பூலும் போட்டியிடுகின்றன. இப்போது எஃப்ஏ கிண்ணப் போட்டியிலும் இவ்விரு அணிகளும் மோதவிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பெரிய அணிகளுக்குப் போட்டி தரும் கிரிஸ்டல் பேலஸ்
லண்டன்: எஃப்ஏ கிண்ணப் போட்டியின் இன்னொரு காலிறுதியாட்டத்தில் எவர்ட்டனை 4-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது கிரிஸ்டல் பேலஸ். இதன் மூலம் பேலஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
பேலஸை ஓரளவு எதிர்பார்ப்புகளை மிஞ்சவைத்துள்ளார் அதன் நிர்வாகி பேட்ரிக் வியேரா. சில நாள்களுக்கு முன் பிரிமியர் லீக்கில் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியுடன் கோலின்றி சமநிலை கண்டது பேலஸ்.
எஃப்ஏ கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் செல்சியுடன் மோதவுள்ளது கிரிஸ்டல் பேலஸ்.
'ரெட் புல்'லுக்குப் பின்னடைவு
மனாமா: பஹ்ரெயின் கிராண்ட் பிரீ ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மொனாக்கோவைச் சேர்ந்த 'ஃபெராரி'யின் சார்ல்ஸ் லெக்லர்க் வெற்றிபெற்றுள்ளார். ஆனால், மேக்ஸ் வெர்ஸ்டாப்பனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நம்பிக்கையுடன் களமிறங்கிய 'ரெட் புல்'லின் வெர்ஸ்டாப்பன் பந்தயத்தின்போது விலகிக்கொள்ள நேரிட்டது. அப்போது அவர் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
'ரெட் புல்'லின் மற்றோர் ஓட்டுநரான மெக்சின்னோவின் செர்ஜியோ பெரெஸும் விலகிக்கொண்டார்.
நீர்ப்பந்து பயிற்றுவிப்பாளருக்குப் புதிய பொறுப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஆண்கள் தேசிய நீர்ப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த கான் ஆயோகி, இனி அணியின் 'டெக்னிக்கல் டைரெக்டர்' எனப்படும் செயல்பாட்டு இயக்குநராகவும் பொறுப்பு வகிப்பார் என்று சிங்கப்பூர் நீச்சல் சங்கம் தெரிவித்துள்ளது. இம்மாதம் முதல் தேதியிலிருந்து அவர் அந்தப் பொறுப்பையும் வகித்து வருகிறார்.
முன்னதாக செயல்பாட்டு இயக்குநர் பதவியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் ஓபர்மான் வகித்தார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புற்றுநோய்க்கு ஆளான தனது மனைவியைக் கவனித்துக்கொள்ள சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அவர் பதவியிலிருந்து விலகினார்.

