விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
8e4639dd-29cb-4dd8-bfb6-3bdd52838325
-

இங்கிலாந்து காற்பந்து அணியில் கைல் வாக்கர், மிட்செல்

லண்டன்: சவுத்ஹேம்டன் காற்பந்துக் குழுவின் கைல் வாக்கரும் கிரிஸ்டல் பேலசின் டைரிக் மிட்செல்லும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து, ஐவரி கோஸ்ட் அணிகளுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்திற்கான 25 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட இங்கிலாந்து அணியின் நிர்வாகி கேரத் சவுத்கேட் இதனைத் தெரிவித்தார்.

காயம் காரணமாக விலகிய அலெக்சாண்டர் ஆர்னல்ட், ஜேம்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏரோன் ராம்ஸ்டேலுக்குப் பதிலாக வெஸ்ட் பிரோம்விச் கோல்காப்பாளர் சேம் ஜான்ஸ்டனும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மார்ச் 26ஆம் தேதி சுவிட்சர்லாந்தையும் 29ஆம் தேதி ஐவரிகோஸ்ட்டையும் எதிர்கொள்கிறது இங்கிலாந்து.

மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா ஆறாவது தொடர் வெற்றி

வெலிங்டன்: மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6வது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து பந்தடித்த ஆஸ்திரேலிய அணித் தலைவி மெக் லான்னிங் தமது 15வது ஒருநாள் சதமடிக்க (135), அந்த அணி 272 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டாலும் ஆஸ்திரேலிய அணி பங்ளாதே‌‌ஷிற்கு எதிரான ஆட்டத்தையும் வென்றுவிட்டால் லீக் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத அணியாக அது இருக்கும்.

சுவிஸ் பொதுவிருதுப் போட்டி: சிங்கப்பூரின் லோ விலகல்

சிங்கப்பூர்: பூப்பந்து விளையாட்டின் உலக வெற்றியாளரான சிங்கப்பூர் நட்சத்திரம் லோ கியன் இயூ, கிருமித்தொற்று காரணமாக சுவிட்சர்லாந்து பொதுவிருதுப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

சென்ற வாரம் அனைத்து இங்கிலாந்து பொதுவிருதுப் போட்டியின்போது, லோ கியன் இயூவிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிங்கப்பூர் பூப்பந்து சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

"லோவிற்கு லேசான அறிகுறிகளே உள்ளன. அவர் எப்போதும்போல் இருக்கிறார்," என்றார் அவர்.

சிங்கப்பூர் திரும்பிய பிறகு, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கொரிய பொதுவிருதுப் போட்டியிலும் கொரிய மாஸ்டர்ஸ் போட்டியிலும் கலந்துகொள்வதற்கான பயிற்சியில் அவர் ஈடுபடுவார். இந்தியாவின் லக்சயா சென் உட்பட பலர் தொற்றுக் காரணமாக சுவிட்சர்லாந்து பொதுவிருதுப் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.