விமானப் பயணிகள் மாண்டதை சீன விமான நிறுவனம் உறுதி செய்தது
பெய்ஜிங்: தெற்கு சீனாவில் விமான விபத்து நடந்த இடத்தில் அதன் உடைந்த, எரிந்த பாகங்களையும் விமானத்தில் இருந்தவர்களின் உடைமைகளையும் மீட்பு பணியாளர்கள் கண்டறிந்தனர்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மாண்டுவிட்டதாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.
132 பேருடன் சென்ற சைனா ஈஸ்டர்னின் எம்யூ5735 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, குவான்சியில் உள்ள மலைக்குன்றில் விபத்துக்கு உள்ளானது.
போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்தில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கான தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், யாரும் உயிருடன் இருப்பதாகவோ, சடலம் கைப்பற்றப்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை.
இதற்கிடையே, சீனாவில் நேற்று பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று புறப்படவிருந்த 11,800 விமானங்களில் 74 விழுக்காடு ரத்து செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களுக்கு இடையேயான விமானச் சேவைகளாகும்.
கிருமிப் பரவல் காரணமாக சீனாவில் விமானச் சேவைகள் அதிகமாக ரத்து செய்யப்பட்டு வந்தாலும், இவ்வாண்டிலேயே நேற்று தான் ஆக அதிகளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம், நாட்டில் சேவையில் உள்ள போயிங் 737 ரக விமானங்களை 'மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பில்' வைத்துள்ளது.
விமானப் பயண நடைமுறைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்களை தான் அனுப்பியுள்ளதாக இயக்ககம் கூறியது.

