நியூயார்க்: கொவிட்-19 தடுப்பூசி அறிமுகம் கண்டபோது, அதற்கான தேவை உற்பத்தியைவிட அதிகமாக இருந்தது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முதலில் தயக்கம் இருந்தாலும், சில நாள்களில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
ஆனால், அமெரிக்காவில் தகுதியுடைய பெரியவர்களில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இன்னமும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்கிறது அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம்.
தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பிரித்தாளும் அரசியல் என அமெரிக்காவின் தடுப்பூசி இயக்கம் கடந்த சில மாதங்களாக சீர்குலைந்துள்ளது.
கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையும் பெரிதும் சரிவு கண்டுள்ளது. கிட்டத்தட்ட பாதி பேர் இன்னமும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்கிறது மையம்.
இதற்கிடையே, உலகம் முழுவதும் ஓமிக்ரானின் துணை திரிபான பிஏ.2 வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால், சற்று கூடுதலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனர்.
ஹீலிக்ஸ், எனும் மரபியல் நிறுவனமானது, அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களில் 50 முதல் 70 விழுக்காடு பிஏ.2 என்று கூறுகிறது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் பிஏ.2 தொற்று சம்பவங்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி வருவதாக நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே முன்பைப் போல் பெரிதும் ஆர்வம் இல்லை. முகக்கவசம் கட்டாயம் கிடையாது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, கொவிட்-19 வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டதாக ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு போன்றவையே தடுப்பூசி மீதான ஆர்வம் குறைவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.

