லிவிவ்: உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதமாகும் நிலையில், உக்ரேனின் முக்கிய நகரங்கள் எதையும் ரஷ்யப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை.
இதனையடுத்து, நகரங்களை முற்றுகையிடவும் கட்டடங்களை குண்டுவீசியும் ரஷ்யப் படைகள் தாக்கத் தொடங்கியதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் உக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மரியபோல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருக்கும் மரியபோல் நகரத்தை ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்திருக்கின்றன.
அந்த நகரமே கட்டட இடிபாடுகள், இறந்தோரின் சடலங்கள் என மரியபோல் நகரம், நரகம் போல் காட்சியளிப்பதாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்தனர்.
அந்நகரில் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உணவு, குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். அவர்கள் நகரைவிட்டு வெளியேற ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்று உக்ரேன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மரியபோல் நகரத்தில் கிட்டத்தட்ட 1,00,000 பேர் 'மனிதநேயமற்ற சூழல்களில்' சிக்கியுள்ளதாக உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பல நகரங்களில் ரஷ்யப் படையினருக்கு எதிராக உக்ரேனிய வீரர்களும் கடும் சண்டையிட்டு வருகின்றனர்.
ரஷ்யாவுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் வகையில், அதன்மீது ஜப்பான் மேலும் பொருளாதார தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஸெலன்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிராக போராட அதிநவீன ஆயுத உதவி வேண்டுமென்று மேற்கத்திய நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, அவசரமாக கூட்டப்பட்டுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பா சென்றுள்ளார்.
இச்சந்திப்பிற்கு பிறகு, ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
உக்ரேனுக்கு அமைதிப்படையை அனுப்புவதாக கூறும் போலந்தின் திட்டம் நேட்டோ ராணுவப் படைகளுக்கும் ரஷ்யப் படைகளுக்கும் இடையேயான நேரடி மோதலுக்கான அழைப்பு என்று ரஷ்யா கூறிஉள்ளது.

