பெய்ஜிங்: விபத்துக்குள்ளான சைனா ஈஸ்டர்ன் விமானத்தின் கறுப்புப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன விமானத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், அந்தக் கறுப்புப் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளதால் அது தகவல் அல்லது குரல் பதிவு பெட்டியா என்பதை அறியும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான விபத்து விசாரணை மையத்தின் தலைவர் மாவோ யான்ஃபெங் கூறினார்.
போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை அறிய இந்தக் கறுப்புப் பெட்டியில் பதிவாகியுள்ள தகவல்கள் உதவக்கூடும்.
132 பேருடன் சென்ற விமானம், சீனாவின் குவான்சி பகுதியில் உள்ள மலைக்குன்றில் சென்ற திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து, விமானத்தின் எரிந்த பாகங்கள், பயணிகளின் உடைமைகளை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால், யாருடைய சடலமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மழை காரணமாக தேடுதல் பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் அடர்ந்த காட்டுப் பகுதியில் அது மீட்பு பணியாளர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று கூறியது.
இந்த வாரம் முழுவதும் மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

