வெலிங்டன்: நியூசிலாந்தில் தற்போதைய கிருமிப் பரவல் உச்சமடைய தொடங்கியுள்ள நிலை யில், அங்கு கட்டாயத் தடுப்பூசி விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கிருமித்தொற்றுக்கு எதிரான நியூசிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக, உலக நாடுகளோடு ஒப்பிடும்போது அங்கு குறைவான மரணங்களே பதிவாகின.
ஆனால், நீண்டகால கட்டுப்பாடுகள் அங்கு மக்களிடையே கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. அது மக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தூண்டியது.
இந்நிலையில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், "மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள், சுகாதாரத் துறைகள், எல்லைகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பணிபுரிவோர் மட்டும் கட்டாயத் தடுப்பூசி விதிமுறைக்கு உட்பட்டால் போதும்," என்றார்.
இவர்கள் ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், இந்த தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கல்வி, காவல்துறை உள்ளிட்ட வேறு சில துறைகளில் பணிபுரிவோருக்கு இனி தடுப்பூசி கட்டாயம் கிடையாது.
அதுபோல், உணவகங்கள், காப்பிக் கடைகள், மற்ற பொது இடங்களுக்குச் செல்வதற்கு இனி தடுப்பூசி அட்டை கட்டாயம் கிடையாது.
12 வயதுக்கு மேற்பட்டவர்களில், 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அங்கு இதுவரை 500,000த்திற்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

