கோலாலம்பூர்: 'சோஸ்மா' சட்டத்தை மேலும் ஐந்து ஆண்டு களுக்கு நீட்டிக்கும் தீர்மானம் மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று தோல்வி கண்டது.
இதையடுத்து, வரும் ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு இச்சட்டம் நடைமுறையில் இருக்காது.
சந்தேகநபர்களை விசாரணையின்றி 28 நாட்களுக்கு போலிசார் தடுத்துவைக்க வழிவகுக்கும் இச்சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதின் முன்மொழிந்தார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 84 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். 86 பேர் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததால் அது நிராகரிக்கப்பட்டது.
தாமதமாக சென்ற மூவர் வாக்களிப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. 50 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மக்களவையில் மலேசிய அரசாங்கம் பெரும்பான்மை வாக்குகளை இழந்தது இதுவே முதல் முறையாகும்.
ஜோகூர், மலாக்கா சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற பெரும்பான்மை வெற்றிகளைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த அம்னோ அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், இத்தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு அவரது சொந்தக் கட்சியான அம்னோவில் இருந்தே நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
ஆனால், தீர்மானம் தோல்வி கண்டதற்கு அரசு ஆதரவு உறுப்பினர்களே காரணம் என பக்கத்தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் ஆன்டனி லோக் தெரிவித்தார்.
"நஜிப் ரசாக், அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிதி உட்பட அரசாங்க ஆதரவு உறுப்பினர்கள் 31 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
"அவர்களில் குறைந்தது நான்கு பேர் வந்திருந்தால்கூட அரசாங்கத்தின் தீர்மானம் நிறைவேறியிருக்கும்.
"அப்படியிருக்கும்போது அந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கத் தவறியதால்தான் தீர்மானம் தோல்வி கண்டதாக கூறுவது ஏற்புடையதல்ல.
"புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய, அம்னோ சாக்குத் தேடுவதாக தெரிகிறது," என்றும் அவர் சொன்னார்.

