செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e4bf040f-4f31-42f8-9dc1-fc204f676402
-

ஆறு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்குத் தடுப்பூசி

வா‌ஷிங்டன்: ஆறு வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக அமெரிக்காவின் மொடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.

பச்சிளம் பிள்ளைகள், பாலர் பள்ளிப் பிள்ளைகளிடம் நடத்தப்பட்ட இந்தப் பரிசோதனையின்போது அவர்களுக்கு 25 மைக்ரோகிராம் அளவுகொண்ட இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டதாகவும் அது, 100 மைக்ரோகிராம் அளவு தடுப்பூசி போடப்பட்ட 18-25 வயதுடையவர்களிடம் உருவாக்கிய அதே அளவு ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விமான விபத்து: சடலங்கள் மீட்பு

பெய்ஜிங்: சீன விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மனித உடல்களின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நடந்த அந்த விபத்திற்குப் பிறகு, கறுப்புப் பெட்டிகளையும் மாண்டவர்களின் சடலங்களையும் தேடும் பணியில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குரல் பதிவுப் பெட்டியில் பதிவானவற்றைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின அதிகாரி ஜு தாவ் சொன்னார். இதற்கிடையே, தன் சகோதரி, அவரது கணவர், 18 மாத பிள்ளையுடன் அந்த விமானத்தில் சென்றதாகவும் அவர்களுக்கு அது முதல் விமானப் பயணம் என்றும் ஆடவர் ஒருவர் சீன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார். அவர்கள் செல்லவிருந்த மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டதால், இந்த விமானத்தில் செல்ல நேர்ந்ததாகவும் அவர் சொன்னார்.

நீண்ட நாள் காதலியை சிறையில் மணந்தார் ஜூலியன் அசாஞ்ச்

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ச் தனது நீண்ட கால துணையான வழக்கறிஞர் ஸ்டெல்லா மோரீஸை லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் திருமணம் செய்துகொண்டார்.

ஜூலியன் அசாஞ்ச் தனது விக்கிலீக்ஸ் தளத்தில், ஆப்கானிஸ்தான், ஈராக் போர் குறித்த அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டார். இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அவர் தென்கிழக்கு லண்டனில் இருக்கும் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார். அதற்கு முன்பாக ஏழு ஆண்டுகள் பிரிட்டன் தலைநகரில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்தார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களின் திருமணத்திற்கு சென்ற ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது.

டோனி விலகல்; ஜடேஜா நியமனம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகியதைத் தொடர்ந்து அப்பொறுப்பிற்கு ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகேந்திர சிங் டோனி அணித் தலைவர் பொறுப்பை ஒப்படைக்க முடிவெடுத்ததுடன் அவரே ரவீந்திர ஜடேஜாவை அப்பொறுப்புக்குத் தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி தொடர்ந்து விளையாடுவார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின், முதல் ஆட்டத்தில் சென்னை, கோல்கத்தா அணிகள் மோதுகின்றன.