லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் செல்சி காற்பந்துக் குழுவின் ரசிகர்கள், இனி அக்குழுவின் ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க டிக்கெட்டுகளை வாங்கமுடியும்.
அக்குழுவின் சிறப்பு உரிமம் தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில் இது சாத்தியமாகிறது.
ஆனால் செல்சி குழு எதிரணி மண்ணில் விளையாடும் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே செல்சி ரசிகர்களால் வாங்கமுடியும். அதே சமயம், செல்சியின் சொந்த அரங்கமான ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்டிஜில் நடைபெறும் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை எதிரணி ரசிகர்கள் மட்டுமே வாங்கமுடியும்.
இந்த டிக்கெட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் செல்சி குழுவிற்குக் கிடைக்காது. மாறாக, அப்போட்டியை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கே அது போய்ச் சேரும் என்று அந்நாட்டின் மின்னியல், கலாசார, ஊடக, விளையாட்டுத் துறை தெரிவித்தது.
செல்சி சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களும் தடை உத்தரவுக்கு முன்பு டிக்கெட் வாங்கிய உள்ளூர் ரசிகர்களும் சொந்த அரங்கில் நடைபெறும் ஆட்டங்களைக் கண்டுகளிக்கலாம்.
ரியால் மட்ரிட் குழுவிற்கு எதிராக ஏப்ரல் 6ஆம் தேதி சொந்த மண்ணில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டியிலும் 10 நாள்கள் கழித்து கிரிஸ்டல் பேலசிற்கு எதிராக வெம்பளேவிலும் விளையாடவுள்ளது செல்சி.
உக்ரேன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, அதன் ரஷ்ய உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச்சிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்தது. இதனால் செல்சி குழுவால் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்கமுடியாமல் இருந்தது.

