இந்தியாவில் இருக்கும் மனைவியைக் காண ரப்பர் படகை ஓட்டிச்சென்ற நபர்

இந்தியாவில் இருக்கும் மனைவியைக் காண ரப்பர் படகை ஓட்டிச்சென்ற நபர்

1 mins read
34bbb3e7-3e45-499b-8f1f-a00e7e674c8f
படம்: தாய்லந்து கடற்படை பேஸ்புக் -

இந்தியாவில் இருக்கும் தம் மனைவியைச் சந்திக்க 2,000 கிலோமீட்டர் தூரம் உள்ள தாய்லாந்திலிருந்து ஒரு படகில் சென்றுகொண்டிருந்த ஆடவரை தாய்லாந்து கடற்படை மீட்டுள்ளது.

தாய்லாந்தின் புக்கெட் தீவிலிருந்து அந்த வியட்நாமியர் ஒரு சிறிய ரப்பர் படகில் தமது பயணத்தைத் தொடங்கினார்.

சாப்பிட உணவும், குடிநீரும் வைத்திருந்த அவர், படகைச் செலுத்த எந்தவொரு வழிச்செலுத்தம் கருவி, திசைகாட்டி, வரைப்படம் போன்றவற்றை தம்முடன் வைத்திருக்கவில்லை.

தாய்லாந்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிமிலான் தீவுகளுக்கு அருகே அந்த நபரைக் கடற்படை மீட்டது.

கொவிட்-19 சூழ்நிலையால் மும்பையில் வேலைபார்க்கும் தம் மனைவியை கடந்த ஈராண்டுகளாக தாம் பார்க்கவில்லை என்றும், அவரைச் சந்திப்பதற்காக படகில் சென்றுகொண்டிருந்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கடந்த 20 நாள்களாக அவர் திசை தெரியாமல் கடலில் மிதந்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.